Saturday, October 24, 2009

சான் ஃபிரான்சிச்கோ வளை குடா தமிழ் மன்றம் வழங்கும் பொன்னியின் செல்வன் - நாடக வடிவில்

தமிழ் மன்றம் வழங்கும் பொன்னியின் செல்வன் நாடகம் வரும் நவம்பர் எட்டாம் நாள் மேடையேற்றப்படுகிறது. இந்த வரலாற்று நிகழ்வில் என்னுடைய சிறு பங்களிப்பும் இருப்பதால் இரட்டிப்பு மகிழ்ச்சி எனக்கு.
மேலதிக விவரங்களூக்கு இங்கே சொடுக்கவும்.

இளவரசர் ஆதித்த கரிகாலரின்
ஆருயிர் நண்பனாய்
தன் கயல்விழியால்
எதிரியின் வாள் முனையை
மழுங்கடிக்கும் பேரழகி
நறுமுகையாள் நந்தினியின்பால்
மையல் கொண்டு
மண்டியிடும் பார்த்திபேந்திர பல்லவனாய்
நான் - பரிமளிக்கும் காட்சியை
காண வாரீர்.வாரீர்..!
அனுமதி இலவசம் - என
அறிவிக்க ஆசைதான் - என்ன செய்ய
கட்டமைப்பு வசதி செய்ய
கட்டணம் கட்டாயமாகிறதே.!

Friday, October 23, 2009

முத்தம்....


அன்னையின் முத்தம்
அன்பின் உச்சம்
கன்னியின் முத்தம்
காதலின் உச்சம்
மழலையின் முத்தம்
மகிழ்ச்சியின் உச்சம்.!


படம்: நன்றி கூகிள்

Saturday, October 17, 2009

இன்று தீவாளி..

இன்று(10/17/2009)
தீபாவளி..
இருபது வருடங்களுக்கு முன்னால்
அந்த
அய்ப்பசி மாத
அடை மழை நாட்களை
உணர்ந்து பார்க்கிறேன்..

ஒரு வாரத்திற்கு முன்னரே
ஊர் களைகட்டும்.
இந்த வருட தீவாளிக்கு
எனக்கு சிதம்பரத்திலிருந்து
சிலுக்கு சட்டையும்
காட்டுமன்னார்கோவிலிலிருந்து
கால் சட்டையும் வரும் - உனக்கு
என்ன வரும் - என
பள்ளி நண்பர்களின்
பரிகாசம் ஆரம்பிக்கும்.

இந்த வருடமாவது
சீருடை அல்லாத
எந்த புது துணியும்
ஏற்றுக்கொள்ள கூடியதே
என மனம் விம்மும்.

என் அன்பிற்குரிய
அலமேலு ஆயாதான்
இந்த கால 'சாண்டாகிளா' சின்
சரி நிகர் சமானி.
அலமேலு - என்
அம்மா வழிப்பாட்டி.
ஆனால் - அம்மாவிற்கு மேல்
வளர்த்தார் எங்களை
சீராட்டி..!

அரசுப்பேருந்தில் அவர்
எப்போ வருவார் - என
வழி மேல் முழி வைத்து
காத்திருப்போம்.!
வருவார் சும்மா
மகாராணி போல்
நடந்து வருவார்.
மூட்டையை பிரித்து ஒவ்வொன்றாக
எடுத்து கொடுப்பார்.
அடுத்து என்ன வரும்
என்னோடது வருமா - என்ற
ஏக்கம் நிறைந்த அந்த மன
உணர்ச்சி - அதற்கு பிறகு
எனக்கென்ற அந்த உடையும் பட்டாசு
வெடியும் கிடைக்கும் போது
உண்டாகும் மன கிளர்ச்சி - இன்று
எவ்வளவு பொருள் ஈட்டினாலும்
கிடைப்பதில்லை. - இந்த கால
குழைந்தைகளுக்கும் கிடைப்பதில்லை
என்றே கருதுகிறேன்.

அடுத்து அம்மா
முறுக்கு சுடும் போது
விறகு அடுப்பில் - தீ அதிகம்
படமால் இருக்க விறகை வெளியில்
இழுக்க வேண்டும் - இதை
யார் செய்வதென்று எங்களுக்குள்
சகோதர யுத்தமே ந்டக்கும்.



தனிமை..

என் இதயத்தை
திருடியவள்
நீ.!
ஆனால்..
தண்டனை 'தனிமை'
எனக்கு மட்டும்
இது
என்ன நியாயம்?


Friday, October 16, 2009

அன்றும்..இன்றும்..

கவிஞன்
அன்று..
சோலைக்குள் சுகம் கண்டான்
இன்று..
சேலைக்குள்...
நடனம்
அன்று..
சதங்கைகள் பேசின
இன்று..
சதைகள் ...

உன் சிரிப்பு..


அன்பே..
உன் சிரிப்பில்
ஏமாந்தது
நான் மட்டுமல்ல..
இந்த வண்டும்தான்
மலர்ந்தது
பூவோ என்று.!

(படம் உதவி: கூகிள்)

படம் பார்த்து க(வி)தை சொல்


தேசப்பிதாவே
எங்கள் வறிய நிலை கண்டே
பகட்டாடை துறந்தாய் அன்று.!
ஆனால்..
உன்
பெயர் சொல்லியே
எங்களை நிர்வாணமாக்கி விட்டனர்
இந்த அரசியல்வாதிகள்
இன்று.

Thursday, October 15, 2009

இரைச்சல்

ஊமைகளின் ஊர்வலத்தில்
மவுனத்தின் இரைச்சல்.!

இன்னொமொரு தீபாவளி.!







இந்த வருடமும்
சிறப்பாய்
அம்மாவின் தாலியை
அடகு வைத்து.!

This page is powered by Blogger. Isn't yours?