Monday, February 15, 2010

வளைகுடாப்பகுதி தமிழ்மன்ற 'மண்வாசனை' தலைப்பில் கவிதை திருவிழா

பிப்ரவரி 14, 2010 அன்று Milpitas ICC அரங்கில் நடைபெற்ற பொங்கல் விழாவில், நான் இயம்பிய கவிதை.!


குடிகாரன் நான்

உரக்கச்சொல்வேன்

ஊரறிய சொல்வேன்

குடிகாரன் நான்

ஆம்..

காட்டுமன்னார்'குடிகாரன்' நான்.!

காவிரிநாடன் நான்

மதுக்கள்ளை

நாடேன் நான்.

இந்திரசித்து என்பது

என் பெயர்.

அவையோர்க்கு

வணக்கம் சொல்லி

தலைப்புக்கு தாவுகிறேன்


மண்வாசனை

ஏற்றதொரு தலைப்பு எனக்கு

ஏனெனில் உழவன் மகன்

நான்,.!


பிழை ஒன்று கண்டேன்..

பிழை ஒன்று கண்டேன்..

தமிழில்

பிழை ஒன்று கண்டேன்..

வாசனையை முகரலாம்

இது பிழையன்றோ.?

நான் சொல்கிறேன்

வாசனையை பார்க்கலாம்

வாசனையை கேட்கலாம்

வாசனையை உணரலாம்

வாசனையை ருசிக்கலாம்

அது எந்த வாசனை - அதுதான்

மண்வாசனை.!


மண்வாசனையை - ஒருவரின்

நடத்தையில் பார்க்கலாம்

உரையாடலில் கேட்கலாம்

விருந்தோம்பலில் உணரலாம்

விருந்தில் ருசிக்கலாம்

இதுதான் மண்வாசனைக்கும் மற்ற

வாசனைக்கும் உள்ள மாறுபாடு..வேறுபாடு.!

மண்வாசனை அறியார்

அறியாரே.!

தாமரை குளத்தழகும்

தாவணி முகத்தழகும்

தரிசிக்க ஏத்த புரம்

எங்க ஊரு நாட்டுப்புறம்

நான் சார்ந்த

அந்த நாட்டுப்புற மண்ணின்

மகத்துவத்தை - எடுத்தியம்ப

ஏராளம் என்னிடம் - ஆனாலும்

நடுவர் - நேரத்தில் காட்டவில்லை

தாராளம்.!


என் மண்ணின் மனிதர்கள்

விருந்தோம்பலில் வித்தகர்கள்.!

நீர் கேட்டு வந்தால்

மோர் தந்து குளிர்விக்கும்

குணவான்கள்.!


சோழனின் படையாண்டு

வீரமானவர்கள் - ஆனாலும்

ஈரமானவர்கள்.!

மரமோ சிரமோ

எது வீழ்ந்தாலும் - இவர்களின்

ஓர விழி - ஆகும்

ஈர விழி.!


மண்வாசனையில் என்

மனம் கவர்ந்தது - தைத்திருநாள்.!

தைத்திருநாளின் தகை அறியார்

தரணியில் யார்?


தைத்திங்கள் வந்துச்சின்னா

ஊரு சனம் ஒண்ணு கூடும்

சாதி சனம் வந்து சேரும்

தகராறு தள்ளி போகும்

வாய்ச்சண்டை வத்திப்போகும்

வீதி வெளிச்சமாகும்

தெருவெல்லாம் வண்ணக்கோலமாகும்.!


மார்கழியின் இறுதியில்

மரக்காலில் நெல் வாங்கி

இரவோடு இரவாக

உரலோடு உறவாடி வந்த புது அரிசி

மறுநாள் புதுப்பானையில்

பொங்கலாகும்.!

பொங்கி முடிந்ததும்

ஞாயிறு முகம் காண காத்திருந்து

கண்டவுடன்

பொங்கலோ பொங்கல் என்றுகூவி

நன்றி சொல்லி

நன்கு முடியும் அன்றைய பொங்கல்.!!


மறுநாள் மாட்டுப்பொங்கல்

மறக்க முடியுமா?

அதிகாலை துயிலெழும்பி

பொங்கல் பானையில் தரித்த

மஞ்சள் கொத்தை - கொண்டு சென்று

கழனியில் காய்த்த நெற்கதிரில் கட்டிவிட்டு

போகியலும் பொங்கலும் போச்சு

பொண்ணு குடுறா பொன்னுசாமி மாமா

என இல்லாத மாமனை - இளக்காரமாய்

சாடும் சொலவடை இன்றும் பிரபலம்.!


மாட்டுப்பொங்கலின் மகத்துவம்

தெரியுமா உங்களுக்கு?

மாட்டுக்கு மாலையிட்டு

பொங்கலிடுவார்கள்.!

இந்த மாலை பின்னுவதில் கூட

ஒரு சூத்திரம் இருக்குதுங்க

நெட்டிலிங்க மாலை

நெத்தி சுட்டிக்காகாது

வாழைப்பூ மாலை

வண்டிக்காளைக்காகாது

தக்கையால மால

தாடிக்கொம்புக்காகாது

மாவிலையோடு மகிழம்பூ சேர்த்து

பழுத கயிற்றில் பாந்தமாய் கோர்த்து

சூட்டி மகிழ்தல் தகுமே.!


களத்து மேட்டுல

கால்நடைகளை கட்டி

பொங்கலோ பொங்கல் கோஷத்தோடு

சுற்றி வருமே சூழ்ந்திருக்கும் ஊர் சனம்.

சுற்றி முடித்து - பசுவின்

பின் தொட்டு வணங்கி

உதைபடாமல் வீழ்ந்தெழுந்தால்

பேறு பெற்றவனாய் பெருமகிழ்ச்சி

அடையும் உள்ளம். - அனுபவித்திருக்கிறீர்களா

நீங்கள்.?


மாட்டுப்பொங்கலின் மறுநாள்

காணும் பொங்கல்.!

மனிதம் போற்றும்

மகத்தான நன்னாள்.!

இருப்பதை பகிர்ந்து எல்லோரும்

இன்புற விழையும்

கட்டற்ற சுதந்திரத்தின்

கரிநாள்.

வீட்டு நிலாக்களுக்கு

விடுமுறை நாள்.!

விழாநாயகர்கள் கூட- பெரியோரைப்போற்றி

காலில் விழும் நாயகர்கள் ஆவார்கள் அன்று

சிறுவாடு சேர்க்கும் சிறார்க்கு - நல்ல வசூல் நாள்.!

இப்படி முடியும் எங்க ஊர்

பொங்கல்.!


இறுதியாக ஒன்று மட்டும்

சொல்வேன் - கண்டங்கள்

கடந்தும் நம் பண்பாடு

பயணப்படுவது - யாரால்?

இதோ இந்த மண்வாசனை மிக்க

மனிதர்களால்.



நன்றி வணக்கம்!


This page is powered by Blogger. Isn't yours?