Tuesday, April 12, 2011

பொங்கல் கவிதை - வளைகுடா தமிழ் மன்ற பொங்கல் விழா 2011

உழவர் திருநாளின் உன்னதம் காப்போம்

அவையோர்க்கு
இந்த மருத நிலத்தானின்
மாண்புறு
வணக்கங்கள்.!

உழவன் எனும்
அடையாளம் துறந்து
பஞ்சம் பிழைக்க
பரதேசம் வந்தவன் நான்
உழவர்களின் உணர்வோடு
உங்களிடம்
ஒரு சில கணங்கள்...

நம் மண்ணின் மனிதர்களின்
மகத்துவம் செப்பும்
உழவர் திருநாள்.!

அந்நாளில்..
எப்போதும் கர்ப்பமாய்
எங்களூர் வயல்கள்
கலம் கலமாய் களமாடி
ஊருக்கே சோறு போடும்
எங்கள் சேறு பூமி.!
பசுவையும் சிசுவை
ஒரு சேர நேசிக்கும்
பண்பாளர்கள் எம் மக்கள்.!

ஓட்டு வீடோ
ஒண்டு குடித்தனமோ
சகலரும் மகிழ்ச்சியாய்
மலர்ந்த காலம்..
அந்த காலம் - அது
இறந்தகாலம்.!

இன்று..
உழவர் திருநாள் உண்மையிலேயே
உழவர் பெருமை போற்றுகிறதா.?
உழவர் திருநாள் பலருக்கு
இன்னொமொரு விடுமுறை
தொலைக்காட்சியில் தங்களை
தொலைக்க ஒரு தொகை நாள்.!

இன்று உழவனின் அவலம்
ஊரறிவதில்லை..
அவர்களின் கோலம்
அலங்கோலம்.
தன் அடுத்த
தலைமுறையை
விவசாயத்திலிருந்து விடுவிக்க
நிர்பந்திக்கும் அவசரம்.!

ஏன் இந்த
அவலம்.?
பல காரணிகள்..
அரசுகளின் பாராமுகம்
சக மனிதர்களின்
சந்தர்ப்பவாதம்
விவசாய இடு பொருட்களின்
விலையேற்றம்
பொருளாதார
தாராளமயமாக்கலின் தாக்கம்
தன் உற்பத்தி பொருளுக்கு
தானே விலை
நிர்ணயிக்க முடியாத நிலை!

அய்ம்பது வருடங்களாக
அய்ந்து ஊதிய குழுக்கள்
அரசு அதிகாரிகளின் வருமானம்
வானளாவ வளர்ந்தது
ஆனால்..
விவசாயிகளின் வாழ்க்கை
வீரியம் இழந்தது.

மருத நிலத்தார்
மாடுகட்டி போரடித்து
பாதி பாருக்கும்
மீதி எலிகளுக்கும்
உணவாக்கினர்
ஆனால்..
இன்று எலிகளே
அவர்கட்க்கு
உணவாகும் சூழல்.!

பெயருக்குத்தான்
மின்சாரம் இலவசம்.!
வருவதோ நான்கைந்து
மணித்துளிகள் - அதுவும் நடு இரவில்
பாம்பும் தேளும் பசியாறும்
மகாநிசியில் மடை திறக்க – விவசாயிகள்
நடுநிசி பேய்கள் போலும்.


தெருவெல்லாம் கோயில்கள்
பாவம் - எந்த சிவனும்
செவிசாய்க்கவில்லை
இவர்கள் குரலுக்கு.!

மரபணு மாற்றம் பெற்ற
விதைகளை புறம் தள்ள
போராடும் உழவர் கூட்டம்..
உங்களில் எத்தனை பேர்
அறிவீர்?

இதுவே 'எந்திரனு'க்கு
எதிர் தடை என்றிருந்தால்
எழுச்சியுற்றிருக்கும் - எம்
மறவர் இனம்.!

ஒரு திரைக்கலைஞனுக்கு தீங்கென்றால்
ஊரு ரெண்டுபடும்
ஊடகங்கள் அதுபற்றி(யே) ஊளையிடும்.!
உழவன்பாடு ஊரறிவதில்லை
என் செய்ய?

அது சரி..
அக்கரையில்
காலனே கதறியழ
ஒரு இனமே கல்லறையாக்கப்பட்டபோது
யாருக்கோ - என்று
இறையாண்மை
காத்த கூட்டமன்றோ..

அலைக்கற்றை
ஒதுக்கீட்டில்
ஆயிரமாயிரம் கோடிகள் அடிப்போர்
சில்லறையாய்
சில கோடி இட்டாலே
உழவரின் வாழ்க்கை
உச்சம் பெறுமே.!

உறவுகளே..
உங்களிடம் ஒரு
வேண்டுகோள்.!
அடுத்த முறை
இந்தியா செல்லும்போது
உழவரைக் கண்டால்
வாஞ்சையுடன்
வணக்கம் சொல்லுங்கள்.
உழவர் சந்தை செல்லுங்கள்
ஆனால் - உள் தரவு
செய்யாதீர்.!
கூடைக்காரரிடம் வாங்குங்கள்
ஆனால் - குதர்க்கம்
பேசாதீர்.!
மெது பானங்கள்
ஒதுக்கி
இளநீருடன்
இளைப்பாறுங்கள்.!
அதுவே
உழவர்க்கு
உங்களாலான - ஒரு
சிறு உதவி.!


------
நன்றி!
இந்திரா தங்கசாமி.

This page is powered by Blogger. Isn't yours?