Tuesday, June 23, 2009

தேர்தல் - என் முதல் கவிதை

இது அச்சில் வந்த என் முதல்  கவிதை(!) , எண்பதுகளின் இறுதியில்  எழுதியது.

இருண்ட தெருக்களுக்கு  
விடிவு வந்தது
மண் சாலைகள் தார் போர்வை
போர்த்திக் கொண்டன
குடிசைக்குள் குழல் விளக்குகள்
நுழைந்தன
ஓ..
நாளை தேர்தல் வருகிறதோ.?

 

Monday, June 22, 2009

கலிஃபோர்னியா தமிழ் கழகம் 2009 ஆண்டு மலரில் என் கட்டுரை


மூன்றாண்டுகளுக்கு முன் நான் லிவெர்மோர் நகருக்கு குடி பெயர்ந்த போது தமிழ் விழாக்கள் மற்றும் தமிழ் குழுமங்களிலிருந்து அந்நியப்பட்டு விட நேருமோ என அச்சப்பட்டதுண்டு. அந்த ஒரு காலகட்டத்தில்தான் கலிஃபோர்னியா தமிழ் கழகம் பிளசண்டன் வரை தன் கிளை பரப்பி வளர்ந்த செய்தியறிந்தேன். உடனடியாக தொடர்பு கொண்டும் பதிவு தேதி முடிந்த நிலையில் 2007ஆம் கல்வியாண்டில் என் மகனை சேர்க்க இயலவில்லை. 2008 ஆம் கல்வியாண்டின் முதல் பதிவு என் மகனுடைய தெ ன்றே கருதுகிறேன். 


கலிஃபோர்னியா தமிழ் கழகத்தின்பால் நான் ஈர்க்கப்பட்டதற்கான முழு முதல் காரணம், எந்த ஒரு அரசியல் சமய சார்புமின்றி மொழியால் இன உணர்வால் உந்தப்பட்ட உணர்வாளர்களால் வழி நடத்தப்படுவததாலேயாகும். கல்வியும் கலாச்சாரமும் கலந்தே இங்கு கற்ப்பிக்கப்படுகிறது. கல்விக்கண் கண்டு நோக்கின் - நன்கு வரையறுக்கப்பட்ட பாட திட்டமும், அதை சிறந்த ஒழுக்க நெறிகளூடன் நடைமுறைப்படுத்துதலும் மிகச்சிறந்த நம்பகத்தன்மையை கலிஃபோர்னியா தமிழ் கழகத்திற்க்கு அளிப்பதாகவே நான் அவதானிக்கிறேன்.


நான் அடிப்படை நிலை 3இ க்கு கற்று தந்து அறிகிறேன், நீங்கள் வியக்கக்கூடும் ஏன் நான் 'அறிகிறேன்' என அறிவிக்கிறேன் என்று, காரணம் இருக்கிறது. குழந்தைகளுக்கு பாடம் எடுப்பது ஒரு குதூகலம் நிறைந்த மகிழ்வு நிகழ்வு, உதாரணத்திற்கு ஒரு நாள் பனை மரம் பற்றி உரையாடல் பகுதியின் போது விளக்குகையில், பேச்சுத்தமிழில் 'பன மரம்' என நான் குறிப்பிட வகுப்பில் ஒரு மாணாக்கர் உடனே 'Is it Money Tree?' என வெகு சிரத்தையுடன் வினவ எனக்கு சட்டென சிரிப்புதான் வந்தது. மேம்போக்காய் பார்த்தால் இது ஒரு வெகுளியின் வினாவாக தோன்றலாம், இருப்பினும் இதன்பின் ஒளிந்துள்ள அந்த மாணாக்கரின் பகுத்தாய்ந்த ஆழ்ந்த சிந்தனையும் தன் சொல் வளத்தால் 'பன' யும் 'பண' த்தையும் இணைத்தது என்னை வெகுவாக கவர்ந்தது. பாருங்கள் குழந்தைகள் எந்த கோணங்களிலெல்லாம் வார்த்தைகளை வளைக்கிறார்கள் என்று. அதன் பின் வகுப்பில் உரையாடும் போது சூழ்நிலைக்கேற்ற வார்த்தைகளை தெரிவு செய்தே பயன்படுத்த அறிந்துகொண்டேன்.


சில வளைகுடாப்பகுதி கல்வி சரகங்களில் கலிஃபோர்னியா தமிழ் கழகத்தின் பாட திட்டத்திற்கான அங்கீகாரம் பெருமைமிகு சாதனை, தமிழனாய் மிக மகிழ்ச்சியடைகிறேன் (இடக்கரடக்கல் கருதி 'கர்வப்படுகிறேன்' என்ற வார்த்தையை தவிர்க்கிறேன்) இந்த சாதனைக்குப்பின் பல நூறு தன்னார்வ தொண்டர்களின் வியர்வையின் ஈரம் இருப்பதை நான் அறியேன் அல்ல. உங்களின் உழைப்பும் வேகமும் என்னைப்போன்ற புதியவர்களுக்கான உந்து சக்தி.


ஒவ்வொரு ஞாயிறு காலையும் இளம் சிறார்கள் இணையும் இப்பள்ளியில் ஆசிரியனாய் அளவளாவுவதில் மிக்க மகிழ்ச்சி எனக்கு. இதில் பெற்றோரின் பெரும்பங்கு சக பெற்றோனாய் நன்கறிவேன். மொழியின்பால் வேட்கை கொண்டு தனக்குப்பிறகு தன் அடுத்த தலைமுறையும் தமிழன் என அடையாளப்படுத்த விழையும் உங்களின் உயரிய நோக்கம் போற்றத்தக்கது. சக தமிழனாய் ஒரு வேண்டுகோள், உங்கள் குழந்தைகளுக்கு சொந்தங்களை தமிழிலேயே அடையாளப்படுத்துங்கள் அம்மா,அப்பா என்றும் தாத்தா,பாட்டி,மாமா,மாமி என்றும் அழைக்கசொல்லி அறிவுறுத்துங்கள், நினைவில் கொள்ளுங்கள் நீங்களே உங்கள் குழந்தையின் முதல் ஆசான். அதேபோல் தமிழை தமிழ் என்றே உச்சரியுங்கள் உச்சரிக்க சொல்லுங்கள்('டமில்' என்று வேண்டாமே!). நாம் சான் ஜோஸ் (San Jose) என்று சொல்வதில்லையே, அந்நிய மொழியின் வளம் குறையாமல் பேசும் நாம் அன்னை மொழியின் வளத்தை சிதைப்பானேன்?



"தமிழர்க்கு தொண்டு செய்யும் தமிழனுக்கு தடைசெய்யும் நெடுங்குன்றும் தூளாய் போகும்!

தமிழுக்கு தொண்டு செய்வோன் சாவதில்லை!"


என்ற புரட்சிக்கவியின் கூற்றை நினைவு கூறி நன்றி நவில்கிறேன் வணக்கம்.!


-இந்திரசித்து தங்கசாமி,

ஆசிரியர், அடிப்படை நிலை 3இ



மீண்டும் நான்...

ரொம்ப வருடங்களூக்குப் பிறகு மீண்டும் இப்பதிவை புதுப்பிக்க உள்ளேன், வேலைப்பளு காரணமாக என்னால் தொடர்ந்து இப்பதிவில் எழுத இயலவில்லை. இனி வரும் காலங்களில் இயன்ற அளவு பதிவுகளிட முயற்ச்சிக்கிறேன். குறைந்த பட்சம் என் படைப்புகளின் ஆவண காப்பகமாகவது இந்த தளத்தை உபயோகப்படுத்த விருப்பம்.

This page is powered by Blogger. Isn't yours?