Thursday, June 23, 2005

2 ருபாய்க்கு ஒஸ்தாரா?

இது நடந்தது 1996ல் நான் M.Tech படிக்கும் போது. ஆந்திராவின் உள்ள ஒரு சுயாட்சி பெற்ற பல்கலைகழகத்தில் ரெசிடெண்ட் மாணவனாக படித்துகொண்டிருந்தேன், மிக கட்டுபாடான கல்லூரி, ஹாஸ்டலும் கல்லூரியும் அருகருயே அமைந்திருப்பதால் வெளியில் செல்லும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. இந்தியாவின் பல பகுதியிலிருந்தும் மாணவர்கள் இங்கு படிக்கின்றனர், கல்லூரியிலும் விடுதியிலும் ஆங்கிலம் மட்டுமே பொது மொழி.


வாய்ச்சொல் வீரர்கள் எங்களைப் போல் சிலருக்கு மட்டும் தெலுங்கு கற்றுக்கொள்வதில் தீராத ஆர்வம். விடுதியில் உள்ள தெலுங்கு நண்பர்களிடம் அவ்வப்போது தெலுங்கு கற்று தரச்சொல்லி தெரிந்து கொள்வோம்.(இலக்கணம் மாறாமல் அவர்கள் முதலில் சொல்லி தந்தது என்னவோ 'அந்த மாதிரி' வார்த்தைகள்தாம்)

மெல்ல மெல்ல 6 மாதங்களுக்குள் குறைந்த பட்ச (நல்ல)வார்த்தைகளுடன் 'மாட்லாட' கற்றுக்கொண்டோம். எங்களின் தெலுங்கு புலமையை எங்காவது சோதித்துப் பார்க்க தோதான நேரம் பார்த்து காத்திருந்த சமயத்தில் வந்தது தஸ்ரா விடுமுறை. இந்த மாதிரி விடுமுறை காலங்களில் குறிப்பிட்ட நேரம் வரை வெளியில் செல்ல அனுமதி உண்டு, என்ன ஆனாலும் சரி இன்னிக்கு டெஸ்ட் பண்ணி பார்த்திட வேண்டியதுதான் என்று வெளியில் நாங்கள் மூவர் மட்டும் கிளம்பினோம்.

மொழி புலமையின்(!)  மீது உள்ள நம்பிக்கையால், எங்கே fancy shop சென்றால் ஆங்கிலம் பேசி நம் திறமை வெளிப்பட வாய்ப்பு இல்லாமல் செய்துவிடுவரோ என்றெண்ணி, சோள கதிர் விற்றுகொண்டிருந்த ஒரு கிராமத்து பெண்ணிடம் சென்று சோளகதிர் வாங்க பேரம் பேச ஆரம்பித்தோம்

நாங்கள்: நமஸ்காரம்ண்டி..

(அப்பெண் திடுக்கிட்டு..): ஏமுண்டி.. ஏமி காவாலி

(பின் நிகழபோவது தெரியாமல் அப்பெண் நினைத்திருக்கவேண்டும் ஆகா! என்ன மரியாத இந்த புள்ளைங்களிடமிருந்து..)

எங்களில் ஒருவன்: கதிர் எந்தா வெலயிலூ?
அப்பெண்: ஒரு கட்டு 3 ரூபாய் (என்றார் தெலுங்கில்)
எங்களில் ஒருவன்(யார்னு சரியா சொன்னா வூட்டுகாரி 'டின்' கட்டிடுவா): 2 ரூபாய்க்கு ஒஸ்தாரா..?
அப்பெண்: ஏமீ..
(சரியாக காதில் விழாமல், அப்பெண் மறுபடியும் கேட்கிறார் என்று நினைத்து)
மறுபடியும்: 2 ரூபாய்க்கு ஒஸ்தாரா..? என்றோம்

இம்முறை அப்பெண் சற்றே ஆவேசத்துடன் ஏமீ.. என எகிற
(நாங்கள் சுதாரித்திருக்கவேண்டும்... அப்போதே)
மறுபடியும்: 2 ரூபாய்க்கு ஒஸ்தாரா..? என்றோம்

அவ்வளவுதான் சத்தம் போட்டு கும்பல் கூட்டிவிட்டார்
எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. வந்தவர்களிடம் என்ன சொன்னாளோ மகராசி.. எங்கள கூறு போட மொத்த கூட்டமும் தயாராயிடுச்சி..

கூட்டதிலிருந்த ஒரு புண்ணியவான்(எங்கள் புலமை பற்றி முன்பே அறிந்திருக்க வேண்டும்) மட்டும் எங்கள் கல்லூரியின் பெருமை கருதி எங்களை காப்பாற்றி விட்டார்

இவ்வளவு கூத்துக்கு அப்புறமும் எங்களில் ஒருவன் செப்பியது யாதெனில் "பாக்கிறதுக்கு அவ நல்லாதான் இருந்தா.."

[புரியாதவர்களூக்கு: 2 ரூபாய்க்கு இஸ்தாரா (2 ரூபாய்க்கு தரியா) என்பதற்க்கு பதில் 2 ரூபாய்க்கு ஒஸ்தாரா(2 ரூபாய்க்கு வரியா) என்று சற்றே பிறழிவிட்டோம்.. ஹி..ஹி)]

Comments:
நெடும்பூரான்,
நல்லவேளை முதுகில் டின் கட்டாமல் விட்டார்கள் என்று சந்தோசப்படுங்கள்.
 
Post a Comment

<< Home

This page is powered by Blogger. Isn't yours?